X

அயதுல்லா அலி காமேனி உயிரிழப்பை உறுதி செய்த ஈரான் – 40 நாட்கள் துக்கம் அணுசரிப்பு

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக அறிவித்துள்ளது. முன்னதாக, நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரான் பிரதிநிதிகள் அதை மறுத்தனர்.

கமேனியை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட டிரம்ப் அவரது மரணம் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு தடையின்றி தொடரும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

இந்நிலையில் ஈரான் அரசு ஊடகத்தில் அவர் உயிரிழந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாவதும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காமேனியின் தியாகம், கொடுங்கோலர்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் தொடக்கமாக அமையும்” என்று எச்சரித்துள்ளது. மேலும், நேற்றைய தாக்குதல்களில் கமேனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் காமேனியின் இல்லம், அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முற்றிலும் அளிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காமேனியின் உடலை புகைப்படம் எடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.