திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றுவதற்காக, பல நூறு கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தீபக் கொப்பரைக்குக் கோயில் வளாகத்தில் உள்ள சின்ன நந்தி சந்நிதி முன்பு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, பின்னர் பருவதராஜ குல வம்சத்தினர் மற்றும் பக்தர்களால் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கங்களுடன் 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கோயில் வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தீபக் கொப்பரைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டியதும், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கம்புகள் மற்றும் கயிறுகள் உதவியுடன் மலைப்பாதை வழியாகத் தீபக் கொப்பரையைத் தோளில் சுமந்தபடி பக்தர்கள் மலை உச்சிக்கு ஏறிச் சென்றனர்.
மகா தீபம் ஏற்றுவதற்காகத் தூய நெய், திரி மற்றும் தீபக் கொப்பரை ஆகியவை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில் பக்தர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.