வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதோடு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், இரண்டு தொகுதிகள் கேட்டு கிடைக்காத மக்கள் வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்வு. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.
மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காக்கும் நோக்கத்துடணும், தமிழக மக்களின் நலன் கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என அறிவிக்கிறோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.
என்னைப் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.