X

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைத்தியம்! – வைரலாகும் புகைப்படங்கள்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது. எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராரன் தாலுகா மருத்துவமனையில் மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு நோயாளிகளின் உறவினர்கள் உதவி செய்கின்றனர்.

இதுபற்றி மருத்துவமனையின் டாக்டர் கூறுகையில், “தினமும் இங்கு 180 முதல் 200 நோயாளிகள் வரை வருகின்றனர். இங்கு கடுமையான மின்பற்றாக்குறை உள்ளது. நோயாளிகள் வரும்போது மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நான் சிகிச்சை அளிக்கிறேன்.” என்றார்.

இதற்கிடையே, மருத்துவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.