X

மோடி மீண்டும் பிரதமராவது நாட்டுக்கு நல்லதல்ல – துணை முதல்வர் பரமேஸ்வரா

பிரதமர் மோடி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராவது நாட்டுக்கு நல்லதல்ல, என்று கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா கூறியுள்ளார். இது குறித்து பெங்களூருவில் பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த 4½ ஆண்டுகளில் நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சி அடைந்து விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல.

இந்த 4½ ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து விட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவி யார், யாருக்கு வழங்கப்படும் என்பதை ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்றாலே பிரச்சினைகள் வருவது சகஜம் தான். ஆனால் பெரிய அளவில் எந்த பிரச்சினைகளும் இல்லை.

இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.