X

டெல்லியில் தீவிரமடைந்த பருவமழை! – நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தலைநகர் டெல்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தோல் அலர்ஜி போன்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளின் வெளிநோயாளிப் பிரிவில் (OPD) சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் கூட்டம் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மழைக்காலச் சூழ்நிலை காரணமாகப் பூஞ்சை காளான் (Fungal) போன்ற தோல் நோய்த்தொற்றுகள் இந்தச் சமயத்தில் பலருக்கும் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது போன்ற மழைக்கால நோய்களுக்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அலட்சியப்படுத்தாமல், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு உடனே மருத்துவர்களை அணுகிச் சிகிச்சை பெற்றுக் கொள்வது மட்டுமே உடல்நலப் பாதிப்புகள் தீவிரமாவதைத் தடுக்கும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.