ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்பும் ஜைடஸ் பிங்கத்தான், நகரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிப்பை வியாழக்கிழமை ஹயாட் ரீஜென்சி சென்னை ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில், பிங்கத்தானின் நிறுவனர்கள், பங்குதாரர்கள் மற்றும் போட்டி நாளில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை ஊக்குவிக்கும் இயக்கத்திற்கு முன்னிலை வகிக்கவுள்ள ஊக்கமளிக்கும் பெண்கள் பங்கேற்றனர்.ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஐலண்ட் கிரவுண்ட்ஸ் வளாகத்தில் நடைபெறவுள்ள சென்னை பதிப்பில், 3 கி.மீ., Lifelong 5 கி.மீ., 10 கி.மீ. ஓட்டப் பிரிவுகளுடன், 50 கி.மீ., 75 கி.மீ., 100 கி.மீ. அல்ட்ரா தூர ஓட்டம் மற்றும் 100 கி.மீ. ரிலே உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெறுகின்றன. அனைத்து வயதினரும், அனைத்து உடற்தகுதி நிலைகளையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
சென்னையில் நடைபெறும் ஜைடஸ் பிங்கத்தான் பதிப்பு, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் மேலும் வலுப்படுத்துவதோடு, அனைத்து தரப்பினரும் எளிதில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் தனது நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதேவேளையில், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு (Preventive Healthcare) குறித்த விழிப்புணர்வையும் பரவலாக ஏற்படுத்தி வருகிறது.கடந்த பல ஆண்டுகளாக, இந்த இயக்கம் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் பெண்களை ஓட்டப்பந்தயத்தின் மூலம் உடற்தகுதியை மேம்படுத்த, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள, சமூக ஒற்றுமையை வலுப்படுத்த மற்றும் நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவித்து வருகிறது. பெண்களின் முழுமையான நலனையும், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்கும் முயற்சியாக ஜைடஸ் பிங்கத்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கான சென்னை ஜைடஸ் பிங்கத்தான் நிகழ்வின் சிறப்பு முன்னோடி பெண்களும் (Mascots) அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களின் வாழ்க்கைப் பயணம், ஜைடஸ் பிங்கத்தான் வலியுறுத்தும் துணிவு, மன உறுதி, விடாமுயற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் உண்மையான அடையாளமாக விளங்குகிறது.இந்த ஆண்டு, 3 கி.மீ. பிரிவில் குழந்தையைத் தாங்கியபடி (Babywearing) ஓடும் தாயான ஜோஹா சனோஃபர், Lifelong 5 கி.மீ. பிரிவில் புற்றுநோயை வென்று மீண்ட நந்திதா முரளிதர், 10 கி.மீ. பிரிவில் பார்வைத்திறன் குறைபாடுடைய ஓட்டப்பந்தய வீராங்கனையான காயத்ரி எம்., 50 கி.மீ. பிரிவில் 65 வயதிலும் தொடர்ந்து ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வரும் கீதா மணிச்சந்தர், 75 கி.மீ. பிரிவில் பணியாற்றும் தொழில்முறை நிபுணரான டெபோரா சுஷ்மா லால், மற்றும் 100 கி.மீ. பிரிவில் லதா ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சமூகத்தில் நிலவும் பழைய எண்ணங்களை மாற்றி, ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், உடற்தகுதியை வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றவும் பெண்களை ஊக்குவிக்கும் முன்னுதாரணங்களாக இவர்கள் திகழ்கின்றனர்.
நிகழ்வில் பேசிய பிங்கத்தான் நிறுவனரும், உடற்தகுதி ஆர்வலருமான மிலிந்த் சோமன் கூறியதாவது:
”ஜைடஸ் பிங்கத்தான் பயணத்தில் ஒவ்வொரு நகரமும் புதிய மாற்றங்களையும், புதிய உத்வேகத்தையும் சேர்க்கும் ஒரு முக்கிய அத்தியாயமாகும். அதில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்புவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் தருணமாகும். பெண்கள் உடற்தகுதியின் மூலம் ஒன்றிணையும்போது, அவர்கள் தங்களது வாழ்க்கையில் மட்டுமல்லாமல், குடும்பங்களிலும் சமூகத்திலும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த இயக்கத்தை சென்னை மக்கள் மீண்டும் உற்சாகத்துடன் வரவேற்று, போட்டி நாளில் பெண்களின் துணிவு, மன உறுதி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் எண்ணற்ற வெற்றிக் கதைகளை கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.”
சென்னையில் நடைபெறும் ஜைடஸ் பிங்கத்தான் பதிப்பின் மூலம், ’தி ஈசியஸ்ட் எக்ஸாம்’ (The Easiest Exam) விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, ஒவ்வொரு மாதமும் தவறாமல் தாங்களே மேற்கொள்ளும் மார்பக சுய பரிசோதனையை (Self-Breast Examination) எளிமையானதுடன் உயிர்களைக் காக்கும் முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைப்பிடிக்க பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோய் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகும்.
இந்நிகழ்வில் பேசிய ஜைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷர்வில் படேல் கூறியதாவது:
”‘தி ஈசியஸ்ட் எக்ஸாம்’ (The Easiest Exam) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் வெறும் மூன்று நிமிடங்கள் ஒதுக்கி பெண்கள் தாங்களாகவே மேற்கொள்ளும் மார்பக சுய பரிசோதனை, உயிர்களைக் காப்பாற்றக்கூடிய முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதே எங்கள் நோக்கமாகும். ஜைடஸ் பிங்கத்தான் மூலம் மேலும் அதிகமான பெண்களை சென்றடைந்து, மார்பகப் புற்றுநோய் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துவதோடு, இந்த நோயை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சியில் அனைவரும் பங்கேற்க ஊக்குவிக்க விரும்புகிறோம். பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் வலிமையான கருவியாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
முக்கிய ஓட்டப் பிரிவுகளுடன், சென்னை பதிப்பில் குழந்தைகளைத் தாங்கியபடி (Babywearing) ஓடும் இளம் தாய்மார்கள், புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய ஓட்டப்பந்தய வீராங்கனைகள் மற்றும் புடவையில் ஓடும் பெண்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு நகரத்தின் தனித்துவமான சமூகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய ஓட்டப் போட்டியாக ஜைடஸ் பிங்கத்தான் தனது பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இந்நிகழ்வில் பேசிய இன்வின்சிபிள் வுமன் (Invincible Women) அமைப்பின் நிறுவனர் அங்கிதா கொன்வார் கூறியதாவது:
”ஜைடஸ் பிங்கத்தான் நடைபெறும் ஒவ்வொரு முறையும், பெண்களின் வலிமைக்கு ஒரே ஒரு வரையறை இல்லை என்பதை அது நமக்கு நினைவூட்டுகிறது. முதல் முறையாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கத் தயாராகும் பெண்ணாக இருந்தாலும், அல்ட்ரா தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனையாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த வெற்றிக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். மேலும் பல பெண்கள் உடற்தகுதியை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு சென்னை ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், ஆரோக்கியத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியத்துவம் வாய்ந்தது.”
இந்த நிகழ்வுக்கு, ஜைடஸ் தலைமைப் பங்குதாரர் (Title Partner) முன்னிலை வகிக்கிறது. மேலும், Lifelong (உடற்தகுதி கூட்டாளர்), Sirona (சுகாதார கூட்டாளர்), Hyatt Regency Chennai (விருந்தோம்பல் கூட்டாளர்), Fujifilm (மார்பக ஆரோக்கிய கூட்டாளர்), MILLD (மாவு கூட்டாளர்), 3TENX (முடி ஆரோக்கிய கூட்டாளர்), Bisleri (நீரேற்ற கூட்டாளர்), Zivame (Activewear கூட்டாளர்) மற்றும் Tasty Nibbles (உணவு கூட்டாளர்) ஆகியவை நிகழ்வை வலுப்படுத்துகின்றன. மேலும், இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மற்றும் Fit India ஆகியவை இந்த நிகழ்விற்கு ஆதரவு வழங்குகின்றன. Inc.5 (பரிசளிப்பு கூட்டாளர்), Big FM (வானொலி கூட்டாளர்) ஆகியவை நிகழ்வின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகின்றன. இந்த நிகழ்வை Smiling Tiger Experiences LLP நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிங்கத்தான், ஒரு நகரத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயமாகத் தொடங்கி, இன்று பெண்களின் ஆரோக்கியம், உடற்தகுதி, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நாடு தழுவிய இயக்கமாக வளர்ந்துள்ளது. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, 2025–26 ஆண்டிற்கான முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை பதிப்பு அமைகிறது. வயது, உடல் திறன் அல்லது எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், உடற்தகுதிக்கு எல்லைகள் இல்லை என்பதையும், ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியப் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்க சமமான வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதையும் இந்த இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.