நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மாணவர்கள் மத்தியில் ஜேம்ஸ் வசந்தன் ஆற்றிய உரையாடலை சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் தவெகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் அவரது எக்ஸ் பக்கத்தில், “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “இதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று நான் வீட்டில் இருந்து கிளம்பும்போது என்னைப் பின்தொடர்ந்து வந்து இதனை செய்திருக்கலாம். அல்லது நான் உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கும் போது அதனைக் கவனித்து இதனை செய்திருக்கலாம். யார், எதற்காக செய்தார்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவரும்.
நான் எதனையும் யூகிக்க விரும்பவில்லை. முகநூலிலும் கூட ‘தறுதலைகளா? தற்குறிகளா?’ என்றுதான் பதிவிட்டேன். இதற்கு காரணம், தாக்குதல் நடத்துவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது தற்போது நான் சொல்லியுள்ள அரசியல் விமர்சன கருத்துகளால் குறிப்பிட்ட நபர்களாக இருக்கலாம். அதன் காரணமாகவே நான் அப்படி பதிவிட்டேன். என் கார் என தெரிந்தே இதனைச் செய்திருக்கிறார்கள் என்பது என் அனுமானம்.
பொதுநலனுக்கான கருத்துகளைச் சொல்லும்போதே பலரையும் நாம் பகைத்துக்கொள்வோம் என்பது நமக்கு தெரியும். இப்படியான சிறுசிறு விஷயங்கள் மூலம் நம்மை அச்சுறுத்திவிட முடியும் என அவர்கள் நினைத்தால், அது தவறு. என் பணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.