X

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தந்துள்ளது திமுக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் முதல்முறையாக மாநிலங்களவை செல்கிறது தேமுதிக.

2005-ல் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, தேமுதிக முதல்முறையாக இந்தமுறை திமுகவுடன் கூட்டணி அமைத்தது. கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இம்முறையும் அதிமுக, பாஜகவிடம் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தேமுதிகவின் மாநிலங்களவை சீட்டிற்கு அதிமுக மறுப்பு தெரிவிக்க, திமுகவுடனும் பேச்சை தொடர்ந்தது தேமுதிக.

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 19 அன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதி செய்தார். தொண்டர்களின் விருப்பப்படியும், மறைந்த தலைவர் விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரேமலதா தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தேமுதிக தரப்பில் ஒரு மாநிலங்களவை இடமும், இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளும் கோரப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்களவை இடத்தை தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது திமுக. தேமுதிக தரப்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பார் என பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதிகள் குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.