X

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமித்த ஆணை ரத்து!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, தனது முதல் நிர்வாகத் தவற்றைச் சரிசெய்யும் விதமாக, ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) நியமித்த ஆணையை இன்று (மே 13) ரத்து செய்துள்ளது.

முன்னதாக, பகுத்தறிவு மற்றும் சமூக நீதிப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில், ஒரு ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்க்க வேண்டிய அரசு, மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நியமனங்களைச் செய்யக்கூடாது என்று பலரும் சுட்டிக்காட்டினர்.

சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே இது குறித்துப் பரிசீலிப்பதாக உறுதியளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், மக்கள் வரிப்பணத்தில் இத்தகைய நியமனம் தேவையற்றது என்ற பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பதவி அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் அதனைத் திரும்பப் பெற்றுள்ளார்.