வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் மேற் கொள்ள மின்சார வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட போதே ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்குத் தனியார் ஊழியர்களை நியமிக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல என்று சாடியுள்ளார்.
மின் பற்றாக்குறை, அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணக் குளறுபடி என எழும் புகார்களைச் சமாளிக்க முடியாத மின்வாரியம், ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாருக்குத் தாரைவார்ப்பது தன் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்வது போலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக அரசு, தூய்மைப் பணிகள், போக்குவரத்துத் துறை, செவிலியர் நியமனம், விமான நிலையம் வரை தனியாரையே நாடி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்கப் பார்க்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இம்முடிவை உடனடியாகக் கைவிட்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.