X

தாய்லாந்து நாட்டில் தொடர் கன மழை – பாங்காக்கின் பல பகுதிகள் பேரழிவுப் பகுதிகளாகப் பிரகடனம்

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் அனைத்து 50 மாவட்டங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பெரும் பேரழிவுப் பகுதிகளாகப் (Disaster Areas) பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

இடைவிடாது கொட்டித் தீர்த்த பெருமழையால் சாலைகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் நீரில் மூழ்கிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையைச் சமாளிக்க பாங்காக் கவர்னர் சாட்சார்ட் சிட்டிபுன்ட் அவசரப் பேரிடர் கால அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், தாய்லாந்து வானிலை ஆய்வு மையம் பாங்காக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 27 வரை மிகக் கனமழை தொடரும் என்றும், வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்துத் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், அவசர நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் தாய்லாந்து அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.