மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் அணை கட்டக் கூடாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை பகிரங்கமாகக் கூறினால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) இருந்து பா.ம.க உடனடியாக விலகத் தயார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கர்நாடகாவிற்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இச்சிக்கல் குறித்து கர்நாடகாவிடம் பேசாமல் மத்திய அரசிடமே பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதே உண்மை எனச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்றத்தில் தவறான தகவல் அளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரைக் கடுமையாகச் சாடியதுடன், இச்சதித் திட்டத்தில் தமிழகம் வீழ்ந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.