X

த.வெ.க அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு, மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் காலம் தாழ்த்தியது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நடைபெறவுள்ள இப்போராட்டம் மூலம், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.