சென்னை பூவிருந்தவல்லி குமணஞ்சாவடி பகுதியில் வசித்து வரும் காயத்ரி என்ற பெண் தனது வீடு கட்டுவதற்காக சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரிசில்லா என்ற பெண்ணிடம் ரூ.25 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.
இதற்கு ஸ்பீடு வட்டியாக மூன்று நாளுக்கு ஒருமுறை வட்டி எனவும் மற்றும் வார வட்டி என 15% சதவீதம் வட்டியை பிரிசில்லா காயத்ரியிடம் மிரட்டி வசூல் செய்துள்ளார்.
காயத்ரி வாங்கிய ரூ.25 லட்சம் பணத்திற்கு வட்டியாக ரூ.69 லட்சம் பணத்தை வெறும் ஆறே மாதங்களில் காயத்ரி பிரிசில்லாவின் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி உள்ளார்.
இது போதாதென்று காயத்ரி இன்னும் ரூ.1 கோடி வட்டி கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் அவரது வீட்டிற்கு திருநங்கைகளை வைத்து கலாட்டா செய்வேன் எனவும் பிரிசில்லா மிரட்டி உள்ளார்.
இதற்கு பயந்து காயத்ரி நில பத்திரங்கள் சிலவற்றை பிரிசில்லாவிடம் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் பிரிசில்லாவின் கந்து வட்டி கொடுமையை தாங்க முடியாத காயத்ரி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால் இந்த புகாரை கண்டு கொள்ளாத காவல்துறை இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
மாறாக கந்து வட்டி கொடுமை செய்த பிரிசில்லா, காயத்ரி தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை எனவும் தனது பணத்தை மீட்டு தருமாறும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை அவசர அவசரமாக விசாரணைக்கு எடுத்து காயத்ரியின் வீட்டிற்கே வந்து காவல் துறை சம்மன் ஒட்டியுள்ளது.
இந்த புகாருக்கு விசாரணை நடத்திய கந்து வட்டி பிரிவு காவல் ஆய்வாளர் சகாய செல்வின் பிரிசில்லாவிடம் நீங்கள் கொடுத்த புகார் சிவில் வழக்கு எனவே நீதிமன்றத்தில் தீர்வை நாடிக்கொள்ளுங்கள் என விசாரணையை முடித்துள்ளார்.
திடீரென அங்கு வந்த கந்து வட்டி பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஸ்டீபன் காவல் ஆய்வாளரை அத்தனை நபர்கள் முன்னிலையில் கடுமையாக சாடி கந்து வட்டிக்கு விட்ட பிரிசில்லாவிற்கு ஆதரவாக செயல்பட்டு காயத்ரியிடம் பணத்தை தரவில்லை என்றால் எப்.ஐ.ஆர் போடுவதாக மிரட்டி பிரிசில்லாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அது மட்டும் இன்றி கந்து வட்டி பிரிவு காவலர்கள் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை என்ற பெயரில் இந்த சிவில் வழக்கை ஒரு நாளைக்கு 8 மணிநேரம் விசாரித்துள்ளனர்.
கந்து வட்டி தொல்லையிலிருந்து விடைபெற புகார் அளித்த பெண்ணை கந்து வட்டி பிரிவு காவல் மேல் அதிகாரியான ஸ்டீபன் வட்டியை செலுத்த மிரட்டிய அவலம் காவல் துறையில் அரங்கேறியுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான காயத்ரி கந்து வட்டி தொல்லையிலிருந்து விடுபட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.