X

புறம்போக்கு நிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல்! – தமிழக அரசின் எரிசக்தித் துறை வெளியிட்ட முக்கிய அரசாணை

தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அரசு அதிகாரிகளிடம் இருந்து ‘தடையில்லாச் சான்று’ (NOC) பெறாமலேயே வீட்டு மின் இணைப்பு வழங்க வகை செய்யும் முக்கியமான அரசாணையை (G.O (Ms) No.100, நாள்: 16.09.2026) தமிழக அரசின் எரிசக்தித் துறை (A1) வெளியிட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, கடந்த 06.07.2026 அன்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இத்தகைய வீடுகளுக்கு ‘Low Tension Tariff IA(3) – Poramboke’ என்ற புதிய தனி மின் கட்டணப் பிரிவின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ‘தமிழ் நிலம்’ வருவாய் பதிவேடுகளின்படி நீர்நிலை புறம்போக்கு, மேய்க்கால், மந்தைவெளி, காடுகள்/வன நிலங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கண்டோன்மென்ட் மண்டலங்கள், ரயில்வே நிலங்கள் மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே இதன் பயன் சேர்வதை உறுதி செய்யவும், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை தாலுகா மற்றும் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட மின் இணைப்புகள் குறித்த விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவருக்கு முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம் உத்தரவிட்டுள்ளார்.