X

இந்தூர் விவகாரத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள பாகிரத்புரா பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 24-ந்தேதி முதல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கழிவுநீர் கலந்த மாசுபட்ட குடிநீரை குடித்ததுதான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முதல்கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் தற்போது பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, விஷம் விநியோகிக்கப்படுகிறது என தனது விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி, “நிர்வாகம் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கையில் இந்தூரில் தண்ணீர் இல்லை, விஷம் விநியோகிக்கப்படுகிறது.

வீடுதோறும் துயரம் பரவியுள்ளது, ஏழைகள் நிர்க்கதியாய் உள்ளனர். இதற்கெல்லாம் மேலாக, பாஜக தலைவர்களின் ஆணவமான பேச்சுகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது; அரசாங்கம் அதற்கு பதிலாக ஆணவத்தை கொடுத்துள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.