X

பயீர்க்காப்பீடு செய்வதற்கான கால கெடுவை நீட்டிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்படும் பயிர்கள் ஒவ்வொரு ஆண்டும் வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அத்தகைய பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காப்பது பயிர்க்காப்பீடு தான். நடப்பு பருவத்தில் ‘கஜா’ புயலால் பெரும்பான்மையான பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இந்தப் பயிர்களுக்கு இன்னும் காப்பீடு செய்யப்படவில்லை.

ஆனால், பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ந் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்குள்ளாக பயிர்க்காப்பீடு செய்வது சாத்தியமில்லை என்ற நிலை விவசாயிகளுக்கு உருவாகியுள்ளது. பயிர்க்காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் சான்றிதழ்கள் தேவை. ஆனால், அச்சான்றிதழ்களை வழங்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் ‘கஜா’ புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அத்தகைய சான்றிதழ்களை வழங்க முடியவில்லை.

இதனால் வேளாண்மை உதவி அலுவலர்கள் வழங்கும் சாகுபடி சான்றிதழைக் கொண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை என்றாலும், பயிர்க்காப்பீடு செய்வதில் உள்ள நெருக்கடிகளை தமிழக அரசின் இந்த சலுகை முற்றிலுமாக களைந்து விடவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

காவிரி பாசன மாவட்டங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மட்டும் தான் வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்ய முடியும். மற்றவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலமாகவே காப்பீடு செய்ய முடியும். ‘கஜா’ புயல் பாதிப்புள்ள பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் பொதுச்சேவை மையங்கள் செயல்படவில்லை. புயல் பாதிப்பு அதிகமில்லாத பகுதிகளில் பொதுச்சேவை மையங்கள் செயல்பட்டாலும் கூட, அங்கு புயல் நிவாரணம் குறித்த தகவல்களை தொகுக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுவதால் அங்கும் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதில்லை.

பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்வது சாத்தியமில்லை. எனவே, பயிர்க்காப்பீடு செய்வதற்கான கெடுவை டிசம்பர் 31-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்.

அத்துடன் பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியத்தை விவசாயிகள் சார்பில் தமிழக அரசே செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.