டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷன், விழித்திரை மருத்துவம் குறித்து ஆண்டுதோறும் நடத்தி வரும் அறிவியல் மாநாடான ரெட்டிகான் (RETICON) 2026, 16-வது ஆண்டாக இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து விழித்திரை நிபுணர்கள், பொது கண் மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக்கல்வி மாணவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழித்திரை (ரெட்டினா) பாதிப்புகளைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன உத்திகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் மற்றும் விழித்திரை சேவைகள் பிரிவின் இயக்குநர் டாக்டர் மனோஜ் கத்ரி ஆகியோர் முன்னிலையில், ரெட்டிகான் 2026 மாநாட்டை மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 50 மருத்துவ வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு, விழித்திரை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த தங்கள் அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் தங்களது சிறப்புரைகள் மூலம் பகிர்ந்துகொண்டனர். விழித்திரை சிகிச்சையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், விழித்திரை இரத்தநாள நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் அறுவைசிகிச்சை முறைகள் குறித்து பங்கேற்ற மருத்துவ பிரிதிநிதிகளுக்கு மதிப்புமிக்க முக்கிய தகவல்கள் இம்மாநாட்டில் நடைபெற்ற அமர்வுகளில் வழங்கப்பட்டன.
Glued IOL, SFT மற்றும் கண்விழி உள்ளுறை ஊசிகள் போன்ற மேம்பட்ட விழித்திரை அறுவைசிகிச்சை நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்ட வெட் லேப் செய்முறைப் பயிற்சிகள் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக அமைந்தன. மேலும், நிபுணர்களின் விவாதங்கள், ரெட்டிகான் பிரீமியர் லீக் போட்டி மற்றும் விழித்திரை சிகிச்சை குறித்த பல்வேறு முக்கிய கருத்தரங்கங்களும் இதில் இடம்பெற்றன.
பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “ரெட்டிகான் மாநாட்டைத் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது உலகெங்கிலும் உள்ள விழித்திரை நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் ஒரு சிறந்த தளமாக இம்மாநாடு வளர்ச்சி கண்டிருப்பதில் நாங்கள் பெருமிதப்படுகிறோம். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், விழித்திரை சிகிச்சை, கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள மருத்துவ நிபுணர்களுக்கும், கண் மருத்துவ மாணவர்களுக்கும் இந்த மாநாடு நிகழ்வு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான கல்வி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பின் வழியாக நோயாளிகளுக்கு சிகிச்சை விளைவுகளை மேம்படுத்த மருத்துவர்களுக்கு உதவுவதே எமது குறிக்கோள்.” என்று கூறினார்.
ரெட்டிகான் 2026 மாநாட்டின் அமைப்புச் செயலாளர் டாக்டர் மனோஜ் கத்ரி கூறுகையில், “பெரும்பாலான பார்வை இழப்புகளுக்கு விழித்திரை பாதிப்புகளே முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதலும் மற்றும் நவீன சிகிச்சையை வழங்குவதும், மருத்துவ நிபுணர்களின் மருத்துவத் திறன்களை தொடர்ச்சியாக உயர்த்துவதும் மிகவும் முக்கியமானதாகும். கண் மருத்துவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், அவைகளை கற்றுக்கொள்வதற்கும், நிபுணர்களுடன் கலந்துரையாடி அறிவை பெருக்கிக் கொள்வதற்கும் இந்த மாநாடு உதவுகிறது. இதன் மூலம் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் விழித்திரை பாதிப்புகளுக்கான சிகிச்சையை மேலும் சிறப்பாக வழங்கி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை பலன்களை உறுதிசெய்ய இயலும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.