X

சென்னை பல்கலைக்கழகம் மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கும் அபாயம்!

சென்னை பல்கலைக்கழகத்தின் செலவினங்களைச் சமாளிக்க சுமார் 100 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், தமிழக அரசு தனது வரவு செலவுத் திட்டத்தில் வெறும் 52 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், பல்கலைக்கழகம் மீண்டும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என அச்சம் எழுந்துள்ளது.

ஓய்வூதியம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குத் தேவைப்படும் நிதியில் பாதி மட்டுமே கிடைத்துள்ளதால், இப் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பல்கலைக்கழகத்தின் வைப்பு நிதியை (Corpus Fund) பயன்படுத்த வேண்டிய சூழல் மீண்டும் ஏற்படலாம் என்றும், இது குறித்து ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ள செனட் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கென ஒதுக்கிய 767 கோடி ரூபாயில் பெரும் பகுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் நிதியைச் சீரமைக்க அரசு தனிச் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்றும், வருவாயைப் பெருக்கும் வழிகளைப் பல்கலைக்கழகம் கண்டறிய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.