மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரு தனியார் ஓட்ட லில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாக தெரிகிறது. அதில் தென்மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பிடித்துள்ளதாகவும், அதில் பல அ.தி.மு.க. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு பா.ஜ.க. தலைமையிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.