அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபீன் கார்க். கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அப்போது பேசிய அசாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக ஒரு கொலை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சுபின் கார்க் மரணத்தில் சந்தேகம் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.