மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை எளிமையாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 5 கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக ‘எஸ்ஆர்எம் பிரைம் கார்டு’ வழங்கும் புதிய ‘எஸ்ஆர்எம் பிரைம் ஜோன்’ திட்டத்தை ராமாபுரத்திலுள்ள எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன்ற ஒரு சிறப்பு மருத்துவ சேவை திட்டம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்காக செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் ராமாபுரம், மணப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், வளசரவாக்கம், கே.கே. நகர், நெசப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பயனடைவார்கள். மேம்பட்ட மருத்துவ சேவைகளை விரைவாகப் பெறுவது, பிரத்யேக சுகாதாரச் சலுகைகள் மற்றும் நோய் தடுப்பு சேவைகள் என பல நன்மைகளை மக்கள் எளிதாகப் பெறுவதை எஸ்ஆர்எம் பிரைம் ஜோன் திட்டம் சாத்தியமாக்கும்.
இத்திட்டத்தின் தொடக்க விழா அன்று நடைபெற்றது. பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் திரு. மனோ இந்த முன்னெடுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி திரு. சிவா, மருத்துவ சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் திரு. செல்வ ராமசாமி, உதவி மருத்துவ சேவைகள் பிரிவு மருத்துவர் ஸ்ரீலேகா வெங்கடேசன், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரைம் ஜோன் பகுதியில் வசிக்கும் 10,000 பேருக்கு மருத்துவ முகாம் மூலம் இலவசமாக உடல்நலப் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தவிருப்பது இந்த முன்னெடுப்பின் சிறப்பம்சமாகும். நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் குறித்த காலஅளவுகளில் நோயறிதலுக்கான உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு மக்களை ஊக்குவிப்பதே இந்த மாபெரும் நோய் தடுப்பு திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த அறிமுக விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு சிறப்பு சலுகைகளை உள்ளடக்கிய ‘எஸ்ஆர்எம் பிரைம் கேர்’ பிரத்யேக அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவருடன் இலவச ஆலோசனைகள், இலவச, உணவுமுறை ஆலோசனைகள், ரத்தப் பரிசோதனை கட்டணங்களில் 20% தள்ளுபடி, படுக்கை மற்றும் மருந்தகக் கட்டணங்களில் 10% தள்ளுபடி, மாஸ்டர் ஹெல்த் செக்-அப் திட்டத்தில் ‘ஒரு நபர் இணையும்போது மற்றொரு நபருக்கு இலவசம்’ சலுகை, மருத்துவமனையிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் வசிக்கிற, எஸ்ஆர்எம் பிரைம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவசர நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை இந்த அட்டையின் கீழ் பயனாளிகள் பெறலாம்.
எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி திரு. சிவா அவர்கள் பேசுகையில்: “ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையில், தரமான மருத்துவ சேவையை குறைந்த கட்டணத்தில் அனைவரும் எளிதில் பெறக்கூடியதாக வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். எமது மருத்துவ சேவை சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சமூகத்தினரோடு ஆழமாக பிணைப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எஸ்ஆர்எம் பிரைம் ஜோன் மற்றும் இலவச பிரைம் கார்டு திட்டத்தின் அறிமுகம், நாங்கள் சேவையாற்றி வரும் பகுதி மக்களுக்கு மருத்துவத்தை இன்னும் நெருக்கமாகவும், எளிதானதாகவும் ஆக்குவது மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
எங்களின் நோய் தடுப்பு மருத்துவ செயல்திட்டத்தின் முக்கிய அங்கமாக, எஸ்ஆர்எம் பிரைம் ஜோன் பகுதியில் வசிக்கும் நபர்களில் முதல் 10,000 பேருக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனைகளை வழங்குகிறோம். எஸ்ஆர்எம் பிரைம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சிறப்பு மருத்துவருடன் இலவச ஆலோசனை, நோய் தடுப்பு சேவைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான கட்டணம் மீது சலுகைகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் உதவி ஆகிய ஆதரவு கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம், நோய் தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும் மக்களுக்கு ஊக்கமளிக்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவை அனைவருக்கும் சாத்தியமானதாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், மக்களுடன் ஒரு நீடித்த நல்லுறவை பேணுவதே எங்களின் இலக்காகும்” என்றார்.