ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமையகத்தில், மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வே மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஹீரலால் நாகர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்தோர் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்த போதே இந்த மின்தடை ஏற்பட்டது. சுமார் 15 முதல் 22 நிமிடங்கள் வரை நீடித்த இந்த திடீர் மின்வெட்டால் ஒட்டுமொத்த அரங்கும் இருளில் மூழ்கிய போதிலும், நிகழ்ச்சி தடைபடாமல் தொடர்ந்தது.
அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களின் மொபைல் போன் டார்ச் விளக்குகள் மற்றும் கேமரா விளக்குகளை ஒளிரச் செய்ய, அந்த வெளிச்சத்திலேயே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அரசின் 12 ஆண்டு சாதனைகளைத் தொடர்ந்து வாசித்தார். மின்சாரக் கோடில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ள நிலையில், சொந்த மின்சார அமைச்சரின் கண்ணெதிரே, சாதனை விளக்கக் கூட்டத்தில் மொபைல் டார்ச் உதவியுடன் கூட்டம் நடந்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.