முருக வழிபாட்டின் முக்கிய நிகழ்வான கந்தசஷ்டி விரதத்தின் ஆன்மீகச் சிறப்புகளை விளக்கித் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பக்தி, வைராக்கியம் மற்றும் வெற்றி ஆகியவை கந்தசஷ்டி விரதத்தின் மூன்று முக்கிய அங்கங்களாக விளங்குவதாகவும், முருகனின் மீது தீவிர பக்தி கொண்டு ஆறு நாட்கள் கடும் விரதமிருக்கும் பக்தர்கள் பலர் கோவில் வளாகங்களிலேயே தங்கித் திரவ உணவு கூட உட்கொள்ளாமல் கடும் வைராக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கடும் விரதமிருப்பதன் மூலம் மனிதர்களுக்கு மனவலிமையும் சரீர சுத்தியும் ஏற்படுவதோடு, ஆறாம் நாள் சூரசம்ஹாரம் நடைபெற்ற பிறகு வெற்றியுடன் விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிப் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம் உலகமெங்கும் புகழ் பெற்ற பக்திப் பாமாலையாகத் திகழ்வதுடன் அதனைத் தவறாது படிப்பதால் மனசுத்தி, சரீர சுத்தி மற்றும் சரீர பாதுகாப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது உண்மையில் “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழியின் திரிபு என்றும், சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் பையான கருப்பையில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது குழந்தைப்பேறு வேண்டுகின்ற மகளிர்க்கு ஞானிகள் அருளிய அருள்வாக்கு என்றும் அவர் விளக்கியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகை நிறைவுபெற்ற பின்னர் வரும் இந்த ஆறு நாட்களும் உண்ணாநோன்பிருந்து சஷ்டி வழிபாடு நடத்தும் அனைத்து முருக பக்தர்களையும் மனதார வாழ்த்துவதோடு, அவர்களின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறத் தான் பிரார்த்திப்பதாகவும் தமிழ்நாடு ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் அன்போடு தெரிவித்துள்ளார்.