தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் மாவட்டரீதியான புள்ளி விவரங்களுடன் தகவல்களை தெரிவித்த மு.க.ஸ்டாலின், பல்வேறு அறிவுறுத்தல்களையும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கினார். குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்து பணியாற்றுவதோடு, 2021- ம் ஆண்டு தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்டம் குறித்து திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்,, “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் எஸ்ஐஆர் பணிகளில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டும் ” என்று கூறினார்.