நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்சல் குழப்பத்திற்கு இடையே, ‘வங்கி புத்தகங்களின் சான்றாதார மசோதா, 2026′ (Bankers’ Books Evidence Act, 2026) விவாதம் எதுவுமின்றி மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
பழமையான 1891-ஆம் ஆண்டின் வங்கி புத்தகச் சான்றாதாரச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய மசோதாவானது, வங்கிகளின் டிஜிட்டல் பதிவுகள், எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள், கம்ப்யூட்டர் லெட்ஜர்கள் மற்றும் பிரிண்டஅவுட்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை நீதிமன்றங்களில் செல்லுபடியாகும் முதன்மைச் சான்றுகளாக (admissible evidence) முறைப்படி அங்கீகரிக்கிறது.
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டிஜிட்டல் வங்கிப் பரிவர்த்தனைகள், ஆன்லைன் நிதிச் சேவைகள் மற்றும் சைபர் குற்ற வழக்குகளைத் தடையின்றி விரைவாக விசாரிப்பதற்குப் பழைய காகித ஆவண முறைகள் போதுமானதாக இல்லாததால், இந்தச் சட்டத் திருத்தம் அவசியமாக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்களவையின் மையப் பகுதிக்கு வந்து தொடர் முழக்கமிட்ட நிலையிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மாசோதா நிறைவேற்றப்பட்டு, நாட்டின் நிதிச் சட்ட நடைமுறைகளை டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.