தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொன்மலை மற்றும் மேலகல்கண்டார் கோட்டை பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே அவர் பேசுகையில், ”கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத அளப்பரிய சாதனைகளைத் தமிழ்நாட்டில் திமுக அரசு செய்து காட்டியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் (கட்டணமில்லா பேருந்து வசதி), முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற உன்னதமான திட்டங்கள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்வர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் திட்டங்களைத் தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த விரும்புவதாகப் பாராட்டியுள்ளனர். அந்த அளவிற்குத் திறமையான ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார்.
திராவிட இயக்கத்தை வேரறுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோதே, இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதற்காகவே முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கரம் கோர்த்தேன். திராவிட இயக்கத்திற்கு எந்தக் கேடும் நேராமல் காப்பதே எனது முதன்மையான கடமை.
”முல்லைப் பெரியாறு, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களில் தமிழக நலனுக்காகப் போராடியவன் என்கிற உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன். மறைந்த மூத்த தலைவர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், சிறந்த முறையில் பணியாற்றி வரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.