ரஷ்யன் கல்விக் கண்காட்சி 2026 (Russian Education Fair 2026) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் இல்லத்தில் இன்று (மே 9) தொடங்கியது.
மே 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியின் தொடக்க விழாவில் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் விடிஐ பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் டாக்டர்.ஜி.வி.செல்வம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும், தென் இந்திய ரஷ்யக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் வலேரி கோட்ஜாயேவ் (Valerii Khodzhaev), சென்னை ரஷ்ய இல்லத்தின் துணைத் தூதர் மற்றும் இயக்குனர் அலெக்சாண்டர் டோடோனோவ் (Alexander Dodonov), வெளிநாட்டு கல்விக்கான ஆலோசனை நிறுவனத்தின் (Study Abroad Educational Consultants) நிர்வாக இயக்குனர் சி.ரவிசந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களையும், ரஷ்ய நாட்டு பல்கலைக்கழக நிர்வாகிகளை வரவேற்று பேசிய சி.ரசிசந்திரன், “இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ள முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமனியன் மற்றும் விஐடி பல்கலைக்கழ துணைத் தலைவர் செல்வம் ஆகியோருக்கு நன்றி. ரஷ்ய நாட்டில் இருந்து வந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளை வரவேற்கிறேன். தெற்காசிய நாட்டின் சிறந்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்த கல்விக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இன்றும், நாளையும் சென்னையில் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சி, அடுத்தது மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம் படிக்க விருப்பப்படும் மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “ரஷ்யன் இல்லத்தின் இந்த கல்விக் கண்காட்சி நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான் மேயராக இருக்கும் போது கூட இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கேற்று இருக்கிறேன். என் மகன் கூட இந்த அமைப்பின் மூலம் தான் மருத்துவம் படித்தார். தற்போது உலகன் பல்வேறு நாடுகளில் மருத்துவத்துறையில் பல பட்டங்களை பெற்று சிறந்த மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சென்னை ரஷ்ய இல்லத்தின் இந்த பணி மிக சிறப்பானது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு மருத்துவத்துறையில் முன்னேற வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், “ரஷ்ய இல்லம் சிறந்த பணியை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவும், இந்தியாவும் ஒரே கலாச்சாரத்தை கொண்டுள்ளது. மொழிக்கு அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள், இந்தியாவும் அப்படித்தான். எனவே, ரஷ்யாவின் படிப்பது இந்தியாவில் படிப்பது போன்று தான். அங்கு பல சிறந்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வி வழங்கப்பட்டுகிறது. இது மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி மருத்துவராக வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
ரஷ்ய கல்விக் கண்காட்சி 2026 பற்றி Study Abroad Educational Consultants இயக்குனர் சுரேஷ் பாபு கூறுகையில், “சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் மற்றும் ஸ்டடி அப்ராட் கன்சல்டன்ஸி இணைந்து ரஷ்யாவில் இருந்து வந்திருக்க கூடிய சிறந்த மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் கண்காட்சியை நடத்துகிறது. சென்னையை தொடர்ந்து மே 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும், ரஷ்ய நாட்டு தூதரக உதவியுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்களை அணுகினால், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம். பல்கலைக்கழகங்களின் கட்டணம் மற்றும் விடுதி வசதி உள்ளிட்ட அனைத்துவிதமான தகவல்களையும் அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம். மேலும், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருக்கும் அதிகாரிகளிடமும் மாணவர்களும், பெற்றோர்களும் நேரடியாக பேசி தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.