X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தொல்.திருமாவளவன்! – அதிக தொகுதிகள் கேட்பதாக தகவல்

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 4 தொகுதிகளில் வென்றனர். நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற விசிக, கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு உற்ற துணையாக இருந்துள்ளது.

இந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட விசிக விரும்புகிறது. அதாவது 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. ஆனால், அதில் பாதியாக குறைத்து வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியையும் சேர்த்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திருமாவளவன் வலியுறுத்தியதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் வரை விசிகவிற்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த டீல் முடிந்தால் திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.