X

டிட்லி புயல் பாதிப்பு – ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,765 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.