சென்னை, பெரம்பூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய்க்கு சென்னை நகர காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்ற விஜய், சென்னையில் பரப்புரை மேற்கொள்வதற்காக அனுமதி கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பெரம்பூர் ,கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை நேரில் சந்தித்து மனு அளித்த விஜய், அதில் தனது கட்சியின் தேர்தல் பணிகளுக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக புகார் அளித்ததோடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்தார்.
முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய ஐந்து தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் நாளை (மார்ச் 30) திங்கட்கிழமை அன்று விஜய் தனது புறப்புரையை தொடங்குகிறார். தற்பொழுது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி பெரம்பூர் கூட்டத்தில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தமிழக வெற்றிக்கழக தரப்பில் 3,000 பேருக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
இன்று (மார்ச் 29) சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் விழாவில் த.வெ.க சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.