X

பல்துறை மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் சிக்கலான ‘பௌத்திரம் / புண்புரை’ பாதிப்பிற்கு வெற்றிகர சிகிச்சை அளித்து சாதனைப் படைத்த வடபழனி காவேரி மருத்துவமனை!

இந்தியாவில் முதன்முறையாகவும், உலகளவில் மிகவும் அரிதான ஒன்றாகவும் கருதப்படும் ஒரு மருத்துவச் சாதனையை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர். பெருங்குடலுக்கும் யோனிக்கும் இடையே அசாதாரண துளை ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த 73 வயது பெண்ணுக்கு, இதயத்தில் உள்ள துளைகளை அடைக்க வழக்கமாக பயன்படுத்தப்படும் கருவியைக் கொண்டு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன, எளிய சிகிச்சை முறை, இரைப்பை குடலியல் துறை நிபுணர்கள் மற்றும் இதய சிகிச்சை நிபுணர்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக சாத்தியமானது. பல வழக்கமான சிகிச்சை செயல்முறைகள் பயனளிக்காத நிலையில், திரும்பத் திரும்ப ஏற்பட்ட இந்த கடும் பிரச்சனைக்கு காவேரி மருத்துவமனையின் இந்த புதிய சிகிச்சை முறை நோயாளிக்கு நிரந்தரத் தீர்வைத் தந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் இந்தத் துளையின் காரணமாக யோனி வழியாக மலம் வெளியேறி வந்ததால், அந்த நோயாளிக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று, தொடர்ச்சியான உடல் உபாதைகள் மற்றும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்தன.

இதற்கு முன்னதாக அப்பெண்ணுக்கு மலத்தை வெளியேற்ற வயிற்றுப் பகுதியில் ஒரு துளை இடப்பட்டு, வெளிப்புறப் பையுடன் குடலை இணைக்கும் ‘கொலோஸ்டமி’ என்ற அறுவைசிகிச்சையுடன் பாதிக்கப்பட்ட பெருங்குடல் பகுதியும் அகற்றப்பட்டது. அதன் பிறகு, அந்த இடத்தில் குடலிறக்கம் ஏற்பட்டதால், அதற்கான அறுவைசிகிச்சையும், பின்னர் குடலை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் சிகிச்சையும் செய்யப்பட்டன. இத்தனை பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும், அவருக்கு அந்தப் பாதிப்புகள் குணமாகாமல், ஃபிஸ்டுலா எனப்படும் புண்புரையான துளை பிறப்புறுப்பில் ஏற்பட்டது.

சவாலான சிக்கலுக்கு புரட்சிகர தீர்வு மற்ற இடங்களில் செய்யப்பட்ட பல சிகிச்சைகள் பலனின்றி தோல்வியடைந்த நிலையில்தான், இப்பெண் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு இருந்த முதல் சவாலே, அந்தத் துளை எந்த இடத்தில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதுதான். ஏனெனில், முந்தைய அறுவை சிகிச்சைகளால் அந்த இடத்திலிருந்த திசுக்கள் முற்றிலும் மாறிப்போயிருந்தன. இருப்பினும், விரிவான பரிசோதனைகள் மற்றும் அதிநவீன எண்டோஸ்கோப்பி முறை மூலம் இரைப்பை குடல் மருத்துவக் குழுவினர், யோனிப் பகுதியில் மலம் வெளியேறும் துளையையும், அதன் பாதையையும் சரியாகக் கண்டறிந்தனர்.

இந்த பாதிப்பின் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட இரைப்பை குடலியல் துறை மருத்துவர்கள், இதயச் சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து, இப்பெண்ணுக்காக ஒரு புதிய சிகிச்சை திட்டத்தை உருவாக்கினர். அதன்படி, இதயத்தின் சுவர்களில் உள்ள துளையை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய அடைப்புக் கருவியை (cardiac occlusion device), பெருங்குடல் மற்றும் யோனிக்கு இடையே உள்ள துளையை மூடுவதற்குப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

இதயத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியை, உடலின் முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதியில் பொருத்துவது சாதாரண விஷயமல்ல; இதற்கு மிகத் துல்லியமான திட்டமிடலும், இரு துறை மருத்துவர்களின் சிறந்த ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டது. இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், நோயாளி எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி நலமாகத் தேறி வருகிறார். இந்த கூட்டு மருத்துவக் குழுவிற்கு, முதுநிலை இரைப்பை குடலியல் மற்றும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.கே. ஆனந்த் மற்றும் முதுநிலை இதய சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பி. மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இரைப்பை குடலியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் டி.கே. ஆனந்த் இச்சிகிச்சை குறித்து கூறியதாவது: “முந்தைய பல அறுவை சிகிச்சைகளால் உடற்கூறியல் அமைப்பு மாறியிருந்ததால், இந்தத் துளையைக் கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நோயாளி பல ஆண்டுகளாக இந்த வேதனையான பாதிப்புடன் வாழ்ந்து வந்தார். அந்தத் துளையை அடைப்பது மட்டுமல்லாமல், அவருக்கு நிம்மதியையும், கண்ணியத்தையும் மீட்டெடுத்து, தரமான வாழ்க்கையை வழங்குவதும் எங்களது நோக்கமாக இருந்தது. அத்துளையையும், அதன் வழித்தடத்தையும் மிகத்துல்லியமாக கண்டறிந்ததே இச்சிகிச்சையில் வெற்றிகரமான விளைவை சாத்தியமாக்கியிருக்கிறது.”

இடையீட்டு இதயவியல் சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் பேராசிரியர் பி. மனோகர் கூறியதாவது: “இதயத்திலுள்ள துளையை அடைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியை, இதயத்திற்கு வெளியே பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைக் கொண்டது. இதற்குத் துளையின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டு, சரியான இடத்தில் பொருத்துவது அவசியமாக இருந்தது. மருத்துவத் துறையில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து சிந்தித்து, சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் ஒரு துறையில் பயன்படுத்தப்படும் உத்தியையும், கண்டுபிடிப்பு கருவிகளையும் மற்றொரு துறையின் சிக்கலான நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்த முடியும் என்பதற்கு இப்பெண்ணுக்கு செய்யப்பட்டிருக்கும் அறுவைசிகிச்சை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.”

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை, காவேரி மருத்துவமனையின் புதுமையான மருத்துவ சிந்தனைக்கும் மருத்துவத் திறமைக்கும் சான்றாகும். இரைப்பை குடலியல் மற்றும் இதயச் சிகிச்சை துறைகளின் நிபுணர்கள் ஒருங்கிணைந்து, மற்ற மருத்துவமனைகளில் குணப்படுத்த இயலாது எனக் கைவிடப்பட்ட ஒரு நோயாளிக்கு இச்சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அளித்துள்ளனர். இத்தகைய சாதனைகள், மிகவும் சிக்கலான, அதிக சவால்மிக்க நோய்களையும் குணப்படுத்துவதில் எமது மருத்துவ திறன்கள் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிசெய்கின்றன.” என்று கூறினார்.