தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்று திரும்பி வந்த த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, வேட்பாளர் நேர்காணலிலும் ஈடுபட்டார். மேலும், சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, “நாம் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடப் போகிறோம். அனைவரும் தங்களது தொகுதிகளில் களப்பணியை தீவிரப்படுத்துங்கள். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று விஜய் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் முழு வேகத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக சென்னை நகரில் பல தொகுதிகளில் கட்சியின் முன்னணி முகங்கள் களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது. அதன்படி, பெரம்பூர் தொகுதியில் விஜய் தானே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, தி.நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் பல மாவட்டச் செயலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.