X

த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டுவோம் – விஜய்க்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கடிதம்

பட்டுக்கோட்டை தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிப்போம், என்று வெள்ளார் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து த.வெ.க தலைவர் விஜய்க்கு அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புடையீர்..!,

வணக்கம், தங்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் ஏனாதி மதன் என்பவர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஏனாதி என்ற கிராமத்தை சார்ந்தவர். 2012 ஆம் ஆண்டு ஊரில் பெருவாரியாக வாழும் எமது வெள்ளாளர் இனத்து பெண்ணை வம்பிழுத்த ஒருவரை ஊரார் கண்டித்த போது, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊர் முக்கியஸ்தரின் வீட்டை தாக்கி, தகராறு செய்த வகையில், அது திருவோணம் காவல் நிலையத்தில் வழக்காக பதிவாகி அதில் மதன் ஏ1 குற்றவாளியாக (FIR நம்பர் : திருவோணம் காவல் நிலையம் 140/2012) சேர்க்கப்பட்டார்.

எமது இனத்திற்கு எதிரக தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களை நிகழ்த்தி வரும் மதன் என்பவரை தாங்கள் மாவட்ட செயலாளராக நியமித்த காரணத்தால் எமது முசுகுந்த நாட்டில் இதுவரை தங்கள் கட்சியில் யாரும் சேரவில்லை, இதுவரை கிளைகளும் தொடங்கப்படவில்லை. இன்னும் சொல்ல போனால் ஏனாதி கிராமத்திலேயே கிளை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், இதுவரை பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக தாங்கள் அறிவித்துள்ளீர்கள். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள எமது இன மக்கள் தங்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என்பதையும், மேற்குறிப்பிட்ட நபர் வாக்கு கேட்டு எமது கிராமங்களுக்கு வந்தால் கருப்பு கொடி காட்டி எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என்பதையும் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளார் இன மக்களையே பிராதன கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் எமது சமூகத்திற்கு எதிராக செயல்படும் ஒரு நபரை பட்டுக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளதை சுட்டுக்காட்ட விரும்புகிறோம்.

எனவே தாங்கள் தயவு செய்து மறு பரிசீலனை செய்து தகுதியான நல்ல வேட்பாளரை தேர்வு செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் கிளை கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மேகலதன், மாநில விவசாய அணித் தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தங்களுக்கு இக்கடிதம் அனுப்பப்படுகிறது.

இப்படிக்கு

அண்ணா சரவணன்
நிறுவனர் தலைவர் மற்றும் முசுகுந்த நாட்டு இளைஞர் பேரவை

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.