X

மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர முக்கிய ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வத்தின் அமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் .

இதையடுத்து தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10,000-க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு பந்தல் அருகே இதற்காக தனியாக அமைக்கப்பட்ட மேடைப்பந்தலில் நடைபெற்ற விழாவில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்தார். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரால் இணைக்கப்பட்ட அனைவரையும் மனதார வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த இணைப்பு விழாவில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்த போது பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அதனால் அனுமதி வாங்கி பேசினேன்.

இது இணைப்பு விழாவா அல்லது இணைப்பு விழா மாநாடா என்று நினைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிரிந்தது. வைத்திலிங்கம் மனவேதனையுடன் காணப்பட்டார். சட்டசபையில் கூட அவர் கவலையுடன் தான் இருந்தார். இதனை நான் அப்போதே பார்த்தேன். சுய மரியாதை முக்கியம் என உணர்ந்து தற்போது வைத்திலிங்கம் தி.மு.க.வில் லேட்டாக இணைந்துள்ளார். லேட்டாக இணைந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து விட்டார்.

தேர்தல் நெருங்கி விட்டது. நாம் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்போம். நமது ஆட்சியில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து விட்டோம். இனி அந்த சாதனையை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை படைக்க போகிறோம். தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: DMKMK Stalin