X

வெளிப்படையான காயங்கள் இன்றி பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கலாம் – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளை நிராகரித்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது குடும்ப வன்முறையை தாலிபான் அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

ஆளும் தாலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா புதிய சட்டத் தொகுப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். புதிய சட்டத்தின் 9-வது பிரிவின்படி, ஆப்கான் சமூகம், மதத் தலைவர்கள், உயர்குடி, நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குற்றத்திற்கான தண்டனை, குற்றவாளி எந்தச் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். 2009-ஆம் ஆண்டு பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை இந்த புதிய சட்டம் ரத்து செய்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, ஒரு ஆண் தனது வீட்டில் உள்ள பெண்ணையோ அல்லது குழந்தையையோ தாக்கும்போது, இரத்தம் வராமலோ அல்லது எலும்பு முறிவு ஏற்படாமலோ இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது. அதாவது, வெளிப்படையான காயங்கள் இல்லாதவரை எவ்வளவு வேண்டுமானாலும் வன்முறையில் ஈடுபடலாம்.

ஒருவேளை கணவர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதைப் பெண் நீதிமன்றத்தில் நிரூபித்தால், கணவருக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமானால், அவருடன் கண்டிப்பாக ஒரு ஆண் வர வேண்டும்.

மேலும், நீதிபதியிடம் தனது காயங்களைக் காட்டும்போது கூட உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றால், அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.