கரூர் மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள ஒரு வினோதமான அரசியல் போஸ்டர் தற்போது இணையதளங்களிலும் பொதுவெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரின் 3084 ஏக்கர் இனாம் நிலப் பிரச்சினையை நீக்கித் தீர்த்து வைத்த வரலாற்றுச் சாதனைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை “கர்த்தரின் தேவதூதர்” என்றும், அதற்கு உறுதுணையாக நின்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை “கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீரமங்கை” என்றும் மிக வினோதமான அடைமொழிகளுடன் ஒப்பிட்டு வாழ்த்துக் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி என்பவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ஒருபுறம் முதலமைச்சர் விஜய் தேவதூதர் போன்ற இறக்கைகளுடனும், மறுபுறம் எம்பி ஜோதிமணி கையில் சூலாயுதத்துடன் மாரியம்மன் போன்ற அலங்காரத்துடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் படங்களுடன், கூட்டணிக் கட்சித் தலைவரான முதலமைச்சர் விஜயை ஆன்மீகக் குறியீடுகளோடு ஒப்பிட்டு காங்கிரஸ் நிர்வாகி ஒட்டியுள்ள இந்த போஸ்டர், கரூர் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.