Tamilவிளையாட்டு

உலக கோப்பை கால்பந்து – இன்று ஒரே நாளில் 3 போட்டிகள்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் கத்தார் உள்பட 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்காக கடந்த 12 ஆண்டுகளில் கத்தார் அரசு 18 லட்சம் கோடி வரை செலவிட்டு உள்ளது. தலைநகர் தோகா, அல்கோரி, லுசைல், அல்ரேயான், அல்வர்க்கா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது.

நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஈக்வடார்-கத்தார் அணிகள் மோதின. இதில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வடார் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வாலென்சியா இந்த 2 கோல்களையும் அடித்தார். 2-வது நாளான இன்று 3 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு அல்ரேயானில் உள்ள கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன. தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஐரோப்பியா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஈரான் 20-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை வீழ்த்துவது சவாலானது. இதனால் ‘டிரா’ செய்ய ஈரான் போராடும். இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

2-வது ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது. தோகாவில் உள்ள அல்துமமா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள செனகல்-நெதர் லாந்து அணிகள் மோதுகின்றன. தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது. 3 முறை இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை இழந்த அந்த அணி செனகலுடன் ஒப்பிடுகையில் வலுவானதாகும். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள செனகல் 18-வது தரவரிசையில் இருக்கிறது. இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. அல்ரேயானில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. 11-வது முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்க தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளது. 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பையில் களம் புகுந்துள்ளது. அந்த அணி தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்க கடுமையாக போராடும். இரு அணியும் 2 முறை மோதி இருந்தன. இதில் 2003-ம் ஆண்டு மோதிய ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. 2020 போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.