Tamilசினிமா

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை மையமாக வைத்து உருவாகும் ’மே 22’

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாகிறது. ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை படமாக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார்.

இவர், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர். படத்துக்கு “மே 22 ஒரு சம்பவம்“ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஹிம்சா புரடக்‌ஷன்ஸ் சார்பில் இரண்டாவது படமாக “மே 22 ஒரு சம்பவம்’’ உருவாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுவிட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் கோபால் பேசுகையில், ‘சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. தமிழகத்தின் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் காரணம், கார்ப்பரேட். இதனால் கார்ப்பரேட் அரசியலை மையப்படுத்தி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *