ஊடுருவல்காரர்கள் தான் காங்கிரஸின் வாக்கு வங்கி – அமைச்சர் அமித்ஷா தாக்கு
பீகாரின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பாஜகவுகான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் பீகாரின் சீதாமர்ஹியில் இன்று நடந்த தேர்தல் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பீகார் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா இல்லையா? நமது அரசியலமைப்புச் சட்டம் இங்கு பிறக்காதவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்கவில்லை.
ராகுல் காந்தி அரசியலமைப்புச் சட்டத்துடன் சுற்றித் திரிகிறார். அவர் அதைத் திறந்து படிக்க வேண்டும். ஊடுருவல்காரர்கள் அவரது வாக்கு வங்கி என்பதால் அவர் SIR-ஐ எதிர்க்கிறார். ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலை நிறுத்த வேண்டும். இது ஒரு புதிய செயல்முறை அல்ல, உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.
கடைசியாக அது 2003 இல் நடந்தது. இப்போது நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால், பீகாரில் உங்கள் தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள். காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. மோடி ஜியின் அரசாங்கம் வந்தது, உரியில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தோம்.
புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தினோம். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலளித்தோம்” என்று தெரிவித்தார்.
