தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார். மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
