பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுவதையொட்டி போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பதற்காக நடிகர் சூரி வந்து இருந்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, காளை உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் காளை உரிமையாளருக்கு டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை நடிகர் சூரி பரிசளித்து சிறப்பித்தார்.
