ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து – சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனை உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று (மார்ச் 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐசியூவில் இருந்த 10 நோயாளிகள், புதிய கட்டிடத்தில் உள்ள ஐ.சி.யூ. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறைச் செயலாளர், கட்டாக் மாவட்ட ஆட்சியர், கட்டாக் காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனைக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், “தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்; அத்துடன், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது. நோயாளிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போது 11 மருத்துவமனை ஊழியர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது; இந்த தீ விபத்து குறித்து விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார். இந்த பயங்கர தீவிபத்து ஒடிசா மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
