Tamilசெய்திகள்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது!

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டம் 1961-ஐ திருத்தி மாற்றும் வகையில், புதிய வருமான வரிச் சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, வருமான வரி விதிகள் 2026 என்ற பெயரிலான இந்த விதிகள், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வரி நடைமுறையில் இருந்த பல குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்கும் வகையில் இந்த புதியா வரி சட்டம் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், புதிய வரி விகிதங்கள் எதுவும் அறிமுகப்படுத்தடவில்லை. கடினமான வருமான வரிச் சட்டங்களை வரி செலுத்துவோர் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சட்டத்தின் மொழி நடை மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலையடுத்து இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது.

இதில், சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-ல் இருந்து 536- ஆகவும், சட்டத் தொகுதியின் எண்ணிக்கை 47-ல் இருந்து 23 ஆகவும் புதிய சட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு படிவம் 33 என்ற படிவத்தில் தொடங்கி 150 க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டிலுமே வரி தாக்கல் செய்யலாம்.