மூன்றாவது முறையாக இன்று மாலை மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு 108 தொகுதிகளை வென்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வர நாற்காலியில் அமர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன், என்பதில் ஆளுநர் பிடிவாதமாக இருக்கிறார். அதே சமயம், பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கேட்டுக்கொண்ட நிலையில், ஆளுநர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். அதேபோல், விஜயும் ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லாமல், தொடர்ந்து அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாரே தவிர, ஆட்சி அமைப்பதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்காமல் இருக்கிறார். விஜயின் இத்தகைய அரசியல் தடுமாற்றத்தை எதிர்த்தும், விமர்சித்தும் பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளிடமும் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். ஆனால், இந்த கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டே முடிவு எடுக்க முடியும் என்று தெரிவிட்துள்ளன. கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று மாலை தங்களது முடிவை அறிவிக்க உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் ஆளுநர் அர்லேகரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இது அவர் ஆளுநரை சந்திப்பது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
