அஹமதாபாத், கொல்கத்தா, சென்னை நகரங்களில் எம்.ஐ.சி.இ ரோட்ஷோக்கள் நடத்தும் இலங்கை கான்வென்ஷன் பியூரோ!
இலங்கை கன்வென்ஷன் பியூரோ ,வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு, 2026 மே மாதத்தின் கடைசி வாரத்தில் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions) தொடர்பான சிறப்பு ரோட்ஷோக்கள் மற்றும் மாலை நேர நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகளை நடக்கவுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் தொழில்துறை மற்றும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இந்திய சந்தையில் இலங்கையை முன்னணி MICE சுற்றுலா தலமாக முன்னிறுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த ரோட்ஷோ அமையும்.
முதல் MICE ரோட்ஷோ 2026 மே 25ஆம் தேதி கிரவுன் பிளாசா அகமதாபாத் நகர மையம் ஹோட்டலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நிகழ்ச்சி 2026 மே 27ஆம் தேதி ஐடிசி சோனார் ஹோட்டலில் கொல்கத்தாவில் நடைபெற்றது. மூன்றாவது மற்றும் இறுதி ரோட்ஷோ 2026 மே 29ஆம் தேதி புல்மேன் சென்னை அண்ணா சாலை ஹோட்டலில் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தியா, இலங்கை சுற்றுலாத்துறைக்கு முக்கிய சந்தையாக தொடர்ந்து திகழ்கிறது. வளர்ச்சிக்கான பெரும் வாய்ப்புகளை வழங்கும் இந்திய சந்தை, இலங்கை சுற்றுலாத்துறையில் முன்னணி இடத்தை நிலைநிறுத்தி வருகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் மட்டும் 5,31,511 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். இது, அந்த ஆண்டில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 22 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும், 2025ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகி வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. இதனுடன், 2025ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருவாய் 3.2 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வருகை தரும் மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 10 சதவீதம் பேர் MICE மற்றும் வணிக சுற்றுலா பயணிகளாக உள்ளனர். இது, இலங்கையின் சுற்றுலாத்துறையில் முக்கிய துணைத் துறையாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதத்தின் நடுப்பகுதி வரை இலங்கை மொத்தமாக 9,51,742 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இதில் 2,21,953 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது, இரு அண்டை நாடுகளுக்கிடையேயான வலுவான இணைப்பு மற்றும் அதிகரித்து வரும் பயணத் தேவையை வெளிப்படுத்துகிறது.
இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம், இலங்கையை இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையில் வாரத்திற்கு 90 விமான சேவைகளை இயக்கி வருகிறது. மேலும், IndiGo மற்றும் Air India நிறுவனங்களும் அகமதாபாத், கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளை வழங்குவதால், வணிக மற்றும் ஓய்வு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை பயணம் மிகவும் எளிதாகவும் வசதியாகவும் உள்ளது.
வரவிருக்கும் இந்த ரோட்ஷோக்கள் மூலம் இலங்கையின் பல்வேறு MICE மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், ஓய்வு, வணிக மற்றும் கார்ப்பரேட் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலங்கை முழுமையாக தயாராக இருப்பதையும் இந்நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. இந்திய பயணத் துறையைச் சேர்ந்த MICE சுற்றுப்பயணம் ஆபரேட்டர்கள், ஊடக பிரதிநிதிகள், இன்ஃப்ளூயன்சர்கள், கார்ப்பரேட் தலைவர்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்துறை பிரதிநிதிகளைக் கொண்ட 24 பேர் கொண்ட குழு, அந்நாட்டின் பல்வகைச் சுற்றுலா சிறப்பம்சங்கள், உலகத் தரமான உட்கட்டமைப்பு, விருந்தோம்பல் மற்றும் தனித்துவமான அனுபவங்களை முன்வைத்து இந்த முயற்சியில் பங்கேற்கிறது.
இந்த இலங்கை சுற்றுலா MICE முன்னெடுப்புகள், சுற்றுலா மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களுக்கிடையே தொழில்முறை ஒத்துழைப்பையும் பயன்தரும் B2B தொடர்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாலை நேர நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகள் மூலம் தொழில்துறை உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. அகமதாபாத், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும் நடைபெறும் செய்தியாளர் சந்திப்புகள், இலங்கையை முன்னணி சுற்றுலா மற்றும் MICE தலமாக இந்திய சந்தையில் மேலும் பிரபலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், இலங்கையின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாசார மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை கலாசார கலைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது.
இலங்கை இந்தியாவுடன் நெருக்கமான புவியியல் அமைப்பு மற்றும் வலுவான இணைப்பைக் கொண்டிருப்பதால், MICE சுற்றுலாவுக்கான சிறந்த தலமாக விளங்குகிறது என்று : இலங்கை கன்வென்ஷன் பியூரோ தலைவர் திரு. தீர ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதனால், சந்திப்புகள், ஊக்கப் பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்காக இலங்கை செலவுக்குறைவானது, ஈர்ப்பானதுமான தேர்வாக அமைகிறது. மேலும், இந்த MICE பிரச்சாரங்கள் இலங்கையின் வளர்ச்சியை வெளிப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலா மற்றும் வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
