கர்நாடகாவில் கனமழை – கே.ஆர்.எஸ் அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் கபினி அணையில் இருந்து மட்டும் திறக்கப்பட்ட நிலையில், தற்போது கே.ஆர்.எஸ் அணையில் இருந்தும் திறக்கப்படும் நீர் பிலிகுண்டுலு எல்லை வழியே மேட்டூர் அணையை வந்தடைய உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் டெல்டா பாசனப் பகுதிகளுக்கான நீர் தேவை கணிசமாக நிவர்த்தியாகும் எனவும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழைத் தீவிரத்தால் அணைகளின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் உபரிநீரின் அளவு உயர்த்தப்படக் கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
