செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச மெகா விளையாட்டு நகரம் திட்டம் ரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச மெகா விளையாட்டு நகரத் திட்டத்திற்கான ₹205.89 கோடி பணி ஆணை ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது போல், இந்த சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தையும் அரசு முழுமையாக ரத்து செய்துவிட்டதா?” எனக் காரசாரமாக வினவினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இத்திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச அளவிலான பெரிய தொடர்களை நடத்தும் வகையில் பரந்த நிலப்பரப்பில், வெள்ளப் பாதிப்புகள் இல்லாதவாறு உலகத் தரத்தில் மாற்றி அமைப்பதற்காகவே (Redesign) தற்போதைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இத்திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மாற்றுத் திட்டங்கள் குறித்து இருவருக்கும் இடையே சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
