உ.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்புகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல்
உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் விமானப்படை பிரிவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த 2024-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
